அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பீகாரில் ராகுல் காந்தி இன்று நடைபயணம்

Image Courtesy: AFP
இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார்.
பாட்னா,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில் 2-வது கட்டமாக இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் பாத யாத்திரையை தொடங்கி உள்ளார்.
மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து கடந்த 14ம் தேதி தொடங்கியது.
கடந்த 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கிய ராகுலின் நடைபயணம் கடந்த 25ம் தேதி மேற்கு வங்காளத்தை அடைந்தது. 2 நாட்கள் ஓய்வுக்கு பின் நேற்று மீண்டும் தொடங்கிய ராகுலின் நடைபயணம் இன்று பீகாரை அடைகிறது.
பீகாரில் நிதிஷ்குமார் நேற்று ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுடன் இணைந்து முதல்-மந்திரியாக பதவியேற்ற நிலையில் ராகுலின் நடைபயணம் அங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.