மந்திரி சபையை விரிவுபடுத்துகிறார் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான்..!


மந்திரி சபையை விரிவுபடுத்துகிறார் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான்..!
x

பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் தனது மந்திரி சபையை நாளை விரிவாக்கம் செய்ய உள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாபில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 117 தொகுதிகளில் 92 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தது. பகவந்த் மான் தலைமையிலான மந்திரி சபையில் 10 எம்.எல்.ஏக்கள் மந்திரிகளாக சேர்க்கப்பட்டனர்.

கடந்த மே மாதம், சுகாதார மந்திரி விஜய் சிங்லா, ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, பகவந்த் மான் தலைமையிலான மந்திரி சபையில் ஒன்பது மந்திரிகள் உள்ளனர்.

இந்த நிலையில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் தனது மந்திரி சபையை நாளை விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும் 5 எம்.எல்.ஏக்கள் புதிய மந்திரிகளாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை மாலை 5 மணிக்கு பஞ்சாப் ராஜ் பவனில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, பகவந்த் மான் தலைமையிலான அரசின் முதல் மந்திரி சபை விரிவாக்கமாகும். புதிதாக 5 மந்திரிகள் பதவியேற்றால் பகவந்த் மான் தலைமையிலான மந்திரி சபையின் பலம் முதல் மந்திரி உட்பட 15 ஆக உயரும்.

புதிய மந்திரிகளாக பதவியேற்கும் எம்.எல்.ஏக்கள் குறித்த தகவல்களை இதுவரை கட்சி வெளியிடவில்லை.


Next Story