புதுச்சேரி அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணி சலுகை இன்று முதல் அமலுக்கு வந்தது
புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணி சலுகை வழங்கப்படுகிறது.
புதுச்சேரி,
புதுவை அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் காலை நேரத்தில் 2 மணி நேர பணி சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. பணிச்சலுகை அறிவிப்பை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசையும் கூட்டாக வெளியிட்டனர்.
இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அரசாணையில் வெள்ளிக்கிழமைகளில் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்படும்.
மாதத்தின் 3 வெள்ளிக்கிழமைகள் இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு சாதாரண விடுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் மட்டுமே இருந்தால் அனைவரும் நிர்வாகத்தின் நலன் கருதி ஒரே நேரத்தில் இந்த சலுகை பெறக்கூடாது.
இந்த நேர சலுகை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனிடையே நேர சலுகை பெண் அடிமைதனத்தை ஊக்குவிப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். சிந்தாத்தை திணிப்பதாகவும் உள்ளது என தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.