சிவில் சர்வீசஸ் தேர்வில் புதுச்சேரி பெண் டாக்டர் சாதனை: தோல்வியை கண்டு துவண்டு விடாமல் படித்தால் வெற்றி நிச்சயம் என பேட்டி


சிவில் சர்வீசஸ் தேர்வில் புதுச்சேரி பெண் டாக்டர் சாதனை: தோல்வியை கண்டு துவண்டு விடாமல் படித்தால் வெற்றி நிச்சயம் என பேட்டி
x
தினத்தந்தி 16 April 2024 8:47 PM IST (Updated: 16 April 2024 8:48 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர் வினோதினி புதுச்சேரி காவல்துறையில் ஓய்வுப்பெற்ற ஐ.ஜி சந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி,

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீசஸ் பதவிகளில் வரும் காலிப்பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான தேர்வுகளையும் நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 9-ந்தேதி வரை நடந்து முடிந்தது. அதிலும் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியானது.

இதில் புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஜி. சந்திரனின் மகள் டாக்டர் வினோதினி(வயது 30) அகில இந்திய அளவில் 64-வது இடத்திலும், புதுவை மாநில அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது கணவர் பார்த்தீபன் மயக்கவியல் டாக்டர் ஆவார்.

வினோதினி லாஸ்பேட்டை குளூனி பள்ளியில் மேல்நிலை படிப்பை முடித்தார். பின்னர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த 2016-ம் ஆண்டு முடித்து அறுபடைவீடு மருத்துவக்கல்லூரியில் டாக்டராக பணி செய்து வந்தார்.

தனது சாதனை குறித்து அவர் கூறியதாவது:-

சிறுவயதில் இருந்தே எனது தந்தை போல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் நான் டாக்டருக்கு படித்தேன். எம்.பி.பி.எஸ். முடித்த உடன் அறுபடைவீடு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் டாக்டராக பணிக்கு சேர்ந்தேன். இருப்பினும் எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என ஆசை ஏற்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் பயற்சி நிறுவனத்தில் படித்து தேர்வு எழுதினேன். அதில் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை.

அதன் பின்னர் நான் டாக்டராக பணி செய்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்தேன். 3 முறை தோல்வி அடைந்தேன். இருப்பினும் விடா முயற்சி எடுத்து கடந்த ஆண்டு 4-வது முறையாக தேர்வு எழுதிய போது எனக்கு வெற்றி கிடைத்தது. அகில இந்திய அளவில் 360-வது இடம் கிடைத்தது. ரெயில்வே துறையில் வேலை கிடைத்தது. அந்த பணியில் சேர்ந்தேன். பின்னர் விடுமுறை எடுத்து டாக்டராக பணி செய்து கொண்டே தொடர்ந்து படித்து வந்தேன். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி கிடைத்தது. அகில இந்திய அளவில் 64-வது இடம் கிடைத்துள்ளது.

இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தோல்வியை கண்டு துவண்டு விடாமல் படித்தால் வெற்றி நிச்சயம். விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதினால் கண்டிப்பாக சாதிக்க முடியும். எனக்கு துணையாக இருந்த எனது குடும்பம், நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story