புதுச்சேரி மாநில அந்தஸ்து பிரச்சினையை அரசியலுக்காக எழுப்புகிறார்கள். - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்


புதுச்சேரி மாநில அந்தஸ்து பிரச்சினையை அரசியலுக்காக எழுப்புகிறார்கள். - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
x

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பிரச்சினையை அரசியலுக்காக எழுப்புகிறார்கள். உடனே இதை வழங்கி விட முடியாது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கிறிஸ்துமஸ் விழா

புதுவை கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கேக் வெட்டினார்கள்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பாஸ்கர், கே.எஸ்.பி.ரமேஷ், அசோக்பாபு, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால், கலெக்டர் வல்லவன், அரசு செயலாளர்கள் உதயகுமார், குமார், முத்தம்மா, புதுவை-கடலூர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர்

இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முகக்கவசம்

அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். அதேபோல் பிறக்கும் 2023-ம் ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கவேண்டும். தற்போது கொரோனா மீண்டும் எட்டிப்பார்க்கிறது. முன்பு கொரோனா மரபணு ஆய்வுக்காக வெளிமாநிலங்களுக்கு மாதிரிகளை அனுப்பினோம்.

ஆனால் தற்போது புதுவையிலேயே இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை வருகிற 28-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைக்க உள்ளார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுவது போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். கட்டுப்பாடு என்பது இப்போது இல்லை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு

புதுவை மாநிலம் வளர்ச்சி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு நல்ல நிர்வாகம், நல்ல ஆட்சி நடப்பதுதான் காரணம். எனவே ஒன்றும் நடக்கவில்லை என்பதெல்லாம் உண்மை அல்ல. முதல்-அமைச்சரிடம் சுகாதார மேம்பாட்டுக்காக ஆலோசனை நடத்தியுள்ளேன். கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்து குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. ஏழை மாணவர்களின் நிலை உயர இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் நசுக்கப்படும் என்பதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலும் தமிழ் படிக்கலாம். கடந்த 10 வருடமாக தமிழை ஏன் கட்டாய பாடமாக்கவில்லை என்று ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகளை கேட்டால் தமிழாசிரியர்கள் நியமிக்க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

அரசியலுக்காக...

மாநில அந்தஸ்து விவகாரத்தில் எம்.பி.யாக இருந்தவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் இதற்காக எத்தனை முறை பேசினார்கள்? புதுவை யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

மாநில அந்தஸ்து விவகாரம் பல ஆண்டு பிரச்சினை. அதை உடனடியாக செய்யவும் முடியாது. எனவே இதுதொடர்பாக நான் கருத்து சொல்ல முடியாது. அதற்காக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும். அங்கு அனுமதிபெறவேண்டும். இது அரசியலுக்காக சொல்லப்படுகிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது.

மாறுபட்ட கருத்து

இப்படி சொல்வதால் முதல்-அமைச்சருக்கும், எனக்கும் பிரச்சினையை உருவாக்கி விடாதீர்கள். பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளேன். நாங்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறோம். ஆனால் நான் சார்ந்த தமிழகத்தின் முதல்-அமைச்சர் இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார் என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story