நடிகர்-நடிகைகளுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம்
காவிரி நதிநீர் விவகாரத்தில் குரல் கொடுக்காமல் மவுனம் காக்கும் நடிகர்-நடிகைகளுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்பாக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
பெங்களூரு:
காவிரி நதிநீர் விவகாரத்தில் குரல் கொடுக்காமல் மவுனம் காக்கும் நடிகர்-நடிகைகளுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்பாக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
கன்னட அமைப்பினர் போராட்டம்
காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த ஆண்டு கர்நாடகத்தில் மழை குறைந்த அளவே பெய்திருப்பதால் காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக 2 மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளன. அதே நேரத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் காவிரி நதிநீர் விவகாரத்தில் கன்னட நடிகர், நடிகைகள் எந்த ஒரு ஆதரவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூரு சிவானந்தா சர்க்கிளில் உள்ள கர்நாடக சினிமா வர்த்தக சபை முன்பாக நேற்று கன்னட அமைப்பினர் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக்கூடாது என்று வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர்கள் மவுனம்
அத்துடன் காவிரி நதிநீர் விவகாரத்தில் கன்னட சினிமா நடிகர், நடிகைகள் குரல் கொடுக்காமல் மவுனம் காத்து வருவதாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும், சாதாரண நடிகர்களில் இருந்து பெரிய நடிகர்கள் வரை சமூக வலைதளங்களில் கூட கர்நாடகத்திற்கோ, விவசாயிகளுக்கு ஆதரவாகவோ எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் கன்னட அமைப்பினர் குற்றச்சாட்டு கூறினார்கள்.
கன்னட நடிகர், நடிகர்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்பாக நேற்று சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
ஆலோசித்து முடிவு
இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் பாமா ஹரீஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'கன்னட மொழி, நிலம், நீர் விவகாரத்தில் எப்போதும் கர்நாடக சினிமா வர்த்தக சபை ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. அதில், சமரசம் செய்து கொண்டதே இல்லை. காவிரி நீர் விவகாரத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
தற்போது கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்பு, தலைவர், பிற நிர்வாகிகளுடன் ஆலோசித்து காவிரி நீர் விவகாரத்தில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்', என்றார்.