தவறான விளம்பரங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.. பாபா ராம்தேவ் பதில்


தவறான விளம்பரங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.. பாபா ராம்தேவ் பதில்
x
தினத்தந்தி 22 Nov 2023 5:31 PM IST (Updated: 22 Nov 2023 5:31 PM IST)
t-max-icont-min-icon

தவறான விளம்பரங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

புதுடெல்லி:

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், நவீன மருந்துகள் மற்றும் தடுப்பூசி இயக்கத்திற்கு எதிராக விளம்பரம் செய்வதாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதஞ்சலியின் தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும் தெரிவித்தது.

மேலும், ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்துவதாக கூறி தவறாக விளம்பரத்தை வெளியிடும் பதஞ்சலியின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்றும், ஊடகங்களில் அதிகாரபூர்வமற்ற அறிக்கைகள் எதையும் வெளியிடக்கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விஷயத்தை அலோபதிக்கும் ஆயுர்வேதத்திற்கும் இடையிலான விவாதமாக மாற்ற விரும்பவில்லை. அதேசமயம், சில நோய்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கும் மருந்துகள் என்று கூறி வெளியாகும் தவறான விளம்பரங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பற்றி ராம்தேவ் கூறுகையில், பதஞ்சலி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதி பிரசாரம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க உள்ளதாகவும் கூறினார்.

பதஞ்சலியின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணாவிடம் கேட்டபோது, 'நாங்கள் நவீன மருந்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அவற்றைப் பயன்படுத்துங்கள், அவர்களின் உதவியைப் பெறுங்கள் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். ஆனால் ஆயுர்வேத மருந்துகளுக்கு எதிரான பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்' என்றார்.


Next Story