தனியார் போக்குவரத்து சங்கங்கள் சார்பில் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு


தனியார் போக்குவரத்து சங்கங்கள் சார்பில் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு
x

பெண்கள் இலவச பயண திட்டத்தை தனியார் பஸ்களுக்கும் விரிவுப்படுத்த கோரி தனியார் வாகன போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் பஸ்-ஆட்டோக்கள் உள்பட சுமார் 7 லட்சம் வாகனங்கள் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு:

பெண்கள் இலவச பயண திட்டத்தை தனியார் பஸ்களுக்கும் விரிவுப்படுத்த கோரி தனியார் வாகன போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் பஸ்-ஆட்டோக்கள் உள்பட சுமார் 7 லட்சம் வாகனங்கள் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'சக்தி' திட்டம்

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டமான 'சக்தி' திட்டம் உள்பட 5 உத்தரவாத திட்டங்களை அறிவித்தது.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் உத்தரவாத திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் 'சக்தி' திட்டத்தை மாநில அரசு தொடங்கியது. அன்றைய தினம் முதல் பெண்கள் அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.

கர்நாடக அரசின் இந்த சக்தி திட்டத்தால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முழு அடைப்புக்கு அழைப்பு

இந்த நிலையில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் 'சக்தி' திட்டத்தை தனியாா் பஸ்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும், ஆட்டோ டிரைவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும், அமைப்புசாரா போக்குவரத்து மேம்பாட்டு வாரியம் உருவாக்க வேண்டும், சர்வதேச விமான நிலையத்தில் இந்திரா உணவகம் திறக்க வேண்டும், மின்சார ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், வாழ்நாள் வரியை தவணை முறையில் பெற வேண்டும், வீட்டு வசதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் பஸ்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், தனியார் பஸ்களை அரசே வாடகைக்கு பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக தனியார் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 11-ந்தேதி (இன்று) முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பு குறித்து போக்குவரத்து மந்திரி ராமலிங்க ரெட்டி சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை ஏற்பது குறித்து அரசு தரப்பில் சரியான உறுதிமொழி அளிக்கப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டப்படி முழு அடைப்பு நடைபெறும் என்று அந்த சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) திட்டமிட்டப்படி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

7 லட்சம் வாகனங்கள்

இந்த முழு அடைப்புக்கு 32 தனியார் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் பள்ளிக்கு வாடகைக்கு இயக்கும் வாகனங்கள் இயங்காது. பெங்களூருவில் சுமார் 2 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோக்கள் ஓடாவிட்டால், அதை நம்பி பயணிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதேவேளையில் வாடகை கார்களையும் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் ஆயிரக்கணக்கான டாக்சிகள் விமான நிலையத்திற்கு இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திற்கு செல்பவர்கள் அந்த கார்களை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்த கார்கள் சேவையை நிறுத்தினால் விமான நிலையம் செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வாகனங்களை இயக்கி வரும் டிரைவர்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுவார்கள். இந்த முழு அடைப்பால் 7 லட்சம் வாகனங்கள் பெங்களூருவில் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர மாவட்டங்களிலும் முழுஅடைப்பு

இந்த முழு அடைப்பு நேற்று நள்ளிரவு 12 மணி முதலே தொடங்கியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்கள் பெங்களூருவில் இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளன. ஆனால் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஒருவேளை அவர்கள் ஊர்வலம் நடத்தினால் அவர்களை போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளது. இந்த முழு அடைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க நகரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக தனியார் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் நடக்கும் முழுஅடைப்புக்கு கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளை சேர்ந்த தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் கடலோர மாவட்டங்களிலும் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. அங்கும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது. இதனால் தனியார் பஸ்களை நம்பி உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள்.


Next Story