'பிரதமரின் தியானத்திற்கும், பா.ஜனதா கட்சிக்கும் தொடர்பு இல்லை' - அண்ணாமலை


பிரதமரின் தியானத்திற்கும், பா.ஜனதா கட்சிக்கும் தொடர்பு இல்லை - அண்ணாமலை
x

பிரதமரின் தியானத்திற்கும், பா.ஜனதா கட்சிக்கும் தொடர்பு இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தியானம் மேற்கொள்கிறார்.

தேர்தலின் இறுதிகட்டம் நெருங்கி வரும் சமயத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், பிரதமரின் தியான நிகழ்ச்சி தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்த நிலையில் பிரதமரின் தியானத்திற்கும், பா.ஜனதா கட்சிக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"குமரி முனையில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் 1892-ம் ஆண்டு டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆகிய 3 நாட்கள் அங்கே கடுந்தவம் செய்தார். அந்த தவத்தின் மூலம் பாரத அன்னையின் சிறப்பை உணர்ந்ததாக விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

அந்த இடத்தில் பிரதமர் மோடி இன்று தியானத்தில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தனது தேர்தல் பிரசாரங்களை முடித்துவிட்டு பஞ்சாப்பில் இருந்து அவர் வந்துள்ளார். இது பிரதமரின் தனிப்பட்ட நிகழ்வு. எனவே பா.ஜனதா கட்சி சார்பில் நாங்கள் யாருமே அங்கு செல்லவில்லை. பிரதமரின் தியானத்திற்கும், பா.ஜனதா கட்சிக்கும் தொடர்பு இல்லை."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story