புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்
புதிய நாடாளுமன்ற கட்டிடம், மார்ச் மாதம் திறக்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி, அந்த கட்டிடத்தில் நடக்கிறது.
புதிய கட்டிடம்
தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. ராஜபாதை சீரமைப்பு மற்றும் துணை ஜனாதிபதி இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் ஆகிய புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது.
தாமதம்
இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சமீபத்தில் முடிவடைந்த குளிர்கால கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புதிய கட்டிடம் தயாராகவில்லை. இருப்பினும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி அவ்வப்போது நேரில் பார்வையிட்டு வருகிறார். கட்டுமான பணி அதிக வேகத்தில் நடந்து வருவதாக அவர் கூறியிருந்தார்.
திறப்பு
இந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம், மார்ச் மாதம் திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறியதாவது:- கட்டுமான பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடைந்து விடும். மார்ச் மாதம் திறந்து வைக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி, புதிய கட்டிடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
புதிய கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பெருமையை பறைசாற்றும் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் அறை, நூலகம், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்தும் பகுதி ஆகியவை இடம்பெற்று இருக்கும்.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்ஜெட் கூட்டத்தொடர்
பொதுவாக, பட்ஜெட் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக நடக்கும். முதல் பகுதி, ஜனவரி 30 அல்லது 31-ந் தேதி, ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 8 அல்லது 9-ந் தேதியுடன் முதல் பகுதி நிறைவடையும்.
மார்ச் மாதம் இரண்டாவது வாரம், பட்ஜெட் தொடரின் 2-வது பகுதி தொடங்கி, மே மாதம் முதல் வாரம்வரை நடக்கும்.
அந்த 2-வது பகுதிதான், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் என்று தெரிகிறது.