ரூ.250 கோடி செலவில் மகளுக்கு பாகுபலி திருமணம் நடத்திய முன்னாள் எம்.பி.


ரூ.250 கோடி செலவில் மகளுக்கு பாகுபலி திருமணம் நடத்திய முன்னாள் எம்.பி.
x

திருமண அழைப்பிதழுடன் வந்து வரவேற்பு விழாவில் பங்கேற்றுச் செல்லும் கிராம மக்கள் 3 லட்சம் பேருக்கு சுவர் கடிகாரம் ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது.

ஐதராபாத்

ரூ.250 கோடி செலவு செய்து தெலங்கானாவைச் சேர்ந்த டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தனது மகளுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துள்ளார்.

இவரின் மகள் ஸ்வப்னா ரெட்டியின் திருமணம் கடந்த 12ம் தேதி இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடந்தது. இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ல 500 பேரை சிறப்பு விமானத்தில் ஸ்ரீனிவாச ரெட்டி அழைத்துச்சென்றார்.

அதற்கு அடுத்து கம்மம் மாவட்டத்தில் தனது மகளுக்கு வரவேற்பு விழாவை ஸ்ரீனிவாச ரெட்டி நடத்தினார். இதுதான் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது.

டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் மக்களவை எம்.பி. ஸ்ரீனிவாச ரெட்டி. இவர் மிகப்பெரிய தொழிலதிபர். தனது மகளின் திருமணத்துக்கு அழைத்துச்செல்ல முடியாதவர்களை வரவேற்புக்கு அழைத்திருந்தார்.

திருமண வரவேற்புக்கு மட்டும் 3 லட்சம் பேர் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக கம்மம் மாவட்டத்தில் எஸ்ஆர் கார்டன் என்று புதிதாக உருவாக்கப்பட்டது. பாகுபலி திருமணம்போல் நடந்த வரவேற்பு விழாவுக்கு வருவோர் தங்குவதற்காக 30ஏக்கரில் பந்தல் போடப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவோர் கார்களை நிறுத்துவதற்காக 200ஏக்கரில் 60ஆயிரம் கார்களை பார்க்கிங் செய்யும் வசதி செய்யப்பட்டது.

தனது மகளை அனைவரும் வாழ்த்த வேண்டும் என்பதற்காக கம்மம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் அழைப்பிதழை ஸ்ரீனிவாச ரெட்டி அனுப்பியிருந்தார்.

திருமண அழைப்பிதழுடன் வந்து வரவேற்பு விழாவில் பங்கேற்றுச் செல்லும் கிராம மக்கள் அனைவருக்கும் சுவர் கடிகாரம் ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது.

வரவேற்பு விழாவுக்கு வரும் விருந்தினர்கள் விருந்துக்காக மட்டும் 25ஏக்கரில் உணவு பரிமாறும் டேபிள், சேர் போடப்பட்டிருந்தது. ஏறக்குறைய 3 லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டது.

தெலங்கானாவில் மிகப்பெரிய சமையல் கலை வல்லுநரான செப் ஜி யாதம்மா அழைக்கப்பட்டிருந்தார். ஐதராபாத்தில் நடந்த பா,ஜனதாவின் செயற்குழுக் கூட்டத்தில் சமைத்து அசத்தியவர் யாதம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகளின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவோருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக புதிதாக சாலை அமைத்தும், புதிய மேம்பாலங்களையும் ஸ்ரீனிவாச ரெட்டி கட்டியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஸ்ரீனிவாச ரெட்டியின் நெருங்கிய நண்பரான ஆந்திர முதல் மந்திரி ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியும் திருமணத்தில் கலந்து கொண்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெகனின் சகோதரி ஷர்மிளா கலந்து கொண்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஸ்ரீனிவாச ரெட்டி, 2014ம் ஆண்டு கம்மம் தொகுதி எம்.பி.யானார். அதன்பின் டிஆர்எஸ் கட்சியில் ஸ்ரீனிவாச ரெட்டி இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 21ம் தேதி அமித் ஷா முன்னிலையில் பொங்குலேடி பாஜகவில் இணைவார் என்ற பிரச்சாரமும் வேகமெடுத்து வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில்.. மகளின் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பாஜக தலைவர்கள் முக்கிய இடம் பிடித்தனர்.உள்ளூர் தலைவர்கள் தவிர, டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை. இது புதிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.


Next Story