தூக்கில் தொங்கிய நிலையில் போலீஸ்காரர் பிணமாக மீட்பு


தூக்கில் தொங்கிய நிலையில் போலீஸ்காரர் பிணமாக மீட்பு
x

பூட்டிய வீட்டுக்குள் மும்பை போலீஸ்காரர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ் தேக்டே (வயது47). மும்பையில் உள்ள போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் தனிமையில் இருந்த அவரை கடந்த 3 நாட்களாக அவரது சகோதரர் செல்போனில் தொடர்பு கொண்டார்.

அவர் செல்போனை எடுத்து பேசாததால் சந்தேகம் அடைந்த சகோதரர், பக்கத்து வீட்டுக்காரருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர் கைலாஷ் தேக்டே வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் வெளியே எங்காவது சென்றிருக்கலாம் என அவரது சகோதரரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கைலாஷ் தேக்டேவின் சகோதரர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சம்பவம் குறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் அவர் தங்கி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு போலீஸ்காரர் கைலாஷ் தேக்டே தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை கொலை செய்து வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story