வாய்மொழி உத்தரவை கொண்டு கும்பாபிஷேக நேரலையை தடுக்கக்கூடாது- சுப்ரீம் கோர்ட்டு
அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை உறுதி செய்யப்படவேண்டும் என்று மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் வாதிட்டார்.
புதுடெல்லி:
அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை தனியார் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நேரலை செய்ய அனுமதி மறுப்பதாக கூறியும், கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்ககூடாது என காவல்துறைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரியும் பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஒரு மதத்தை மறுக்கும் அரசியல் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்போது, சில விஷயங்களை அரசு நடவடிக்கையாக செயல்படுத்த நினைக்கிறது. மேலும், இதுபோன்ற வாய்மொழி உத்தரவு இருப்பதால் தனியார் கோவில்களிலும் பூஜை, நேரலை நடைபெறுவதில் சிக்கல் உள்ளது. அர்ச்சனை, சிறப்பு பூஜைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, என்றார்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வாய்மொழி உத்தரவை வைத்து எவ்வாறு உத்தரவு பிறப்பிப்பது? என்று கேட்டார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனியார் கோவில்களில் நேரலை செய்ய அனுமதிக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அவ்வாறு எவ்வித சட்டமும் இல்லை என்றார். அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை உறுதி செய்யப்படவேண்டும் என்றும் தனது வாதத்தை முன்வைத்தார்.
பின்னர் பேசிய நீதிபதிகள், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேரலை, ராமர் பெயரில் பூஜை ஆகியவற்றை வாய்மொழி உத்தரவு கொண்டு தடுக்கக்கூடாது என்றனர். வாய்மொழி உத்தரவை ஏற்று காவல்துறை செயல்படக்கூடாது. சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டதோ அதை அனுமதிக்கவேண்டும் என்றும் கூறினர்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி வாதாடும்போது, ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும், இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்தார்.
அனைத்து வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் 29ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.