சிவமொக்கா நகரில் போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி
போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிவமொக்கா நகரில் போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
சிவமொக்கா-
போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிவமொக்கா நகரில் போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். இதில் போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் கலந்துகொண்டார்.
போக்குவரத்து விதிமீறல்கள்
மலைநாடு மாவட்டமான சிவமொக்கா நகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வது, சிக்னல்களில் நிற்காமல் செல்வது, 3 ேபரை இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்வது, கார்களில் சீட்பெல்ட் அணியாமல் செல்வது, தடை செய்யப்பட்ட வழிகளில் வாகனங்களில் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் மீறி வருகிறார்கள்.
அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தாலும், அதனை வாகன ஓட்டிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
விழிப்புணா்வு பேரணி
இந்த நிலையில், சிவமொக்கா நகர போலீசார் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று சிவமொக்கா நகரில் போலீசார் சார்பில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான போலீசார் கலந்துகொண்டு சிவமொக்கா நகரில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து பேரணியாக சென்றனர்.
சிவமொக்கா நகர் மாவட்ட போலீஸ் மைதானத்தில் இருந்து இந்த பேரணியை போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவரும் இந்த பேரணியில் கலந்துகொண்டார். போலீஸ் மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி விருந்தினர் விடுதி சர்க்கிள், ஆல்கோளா சர்க்கிள், வினோபாநகர், மகாவீர் சர்க்கிள், பழைய பஸ் நிலையம், கோபாலா வழியாக சென்றது. தொடக்கம் முதல் இறுதி வரை போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் இந்த பேரணியில் கலந்துகொண்டார்.
ஒத்துழைக்க வேண்டும்
பின்னர் அவர் பேசுகையில், போக்குவரத்து விதிகளை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறும்போது ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. இதனை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களுக்காக தான் போக்குவரத்து விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.