உடல் உறுப்புதானம் செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு


உடல் உறுப்புதானம் செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
x

உடல் உறுப்பு தானம் செய்வோர், அதைப் பெறுவோருக்கு கடவுள் மாதிரி என கூறி, உடல் உறுப்பு தானம் செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

உடல் உறுப்பு தானம்

பிரதமர் மோடி 'மன்கிபாத்' என்னும் 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் கலந்துரையாடியபோது உடல் உறுப்புகள் தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதுபற்றி அவர் பேசியபோது கூறியதாவது:-

இந்த நவீன மருத்துவ அறிவியல் யுகத்தில், உடல் உறுப்புதானம் என்பது யாரோ ஒருவருக்கு உயிர் அளிக்கக்கூடிய மிகப்பெரிய வழியாக ஆகி இருக்கிறது. ஒருவர் இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளைத் தானம் அளித்தால், அவரால் 8 முதல் 9 நபர்களுக்கு, புதியதோர் வாழ்க்கை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதில் மன நிறைவை அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று நமது நாட்டில் உடல் உறுப்பு தானம் மீது விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பது தான்.

உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு

2013-ம் ஆண்டில் நமது நாட்டில், உடல் உறுப்பு தானம் என்னும் போது 5 ஆயிரத்துக்கும் குறைவான அளவில் தான் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டிலே, இந்த எண்ணிக்கை அதிகரித்து 15 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. உடல் உறுப்பு தானம் செய்வோரும், அவர்களுடைய குடும்பங்களும், இப்படிச் செய்வதன் மூலம் உண்மையிலே மிகவும் புண்ணியம் செய்திருக்கிறார்கள்.

உடல் உறுப்பு தானத்தைப் பொறுத்தமட்டில், ஒரே சீரான கொள்கையை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது உடல் உறுப்பு தான செயல்முறையை எளிமையாக்குவதுடன், உயிர்காக்கும் இந்த செயலில் மக்களை ஊக்குவிக்கும்.

மக்கள் முன் வரவேண்டும்

தங்கள் இறப்புக்குப் பின்னர் உடல் உறுப்புகளைத் தானம் செய்வோர். அவற்றைப் பெறுவோருக்கு கடவுள்மாதிரி. மக்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகிறபோது, அது பல உயிர்களைக் காக்கும். நாட்டில் எந்த இடத்திலும் உடல் உறுப்புகள் தேவைப்படுவோர் தங்களைப் பதிவு செய்து கொள்ள அனுமதிக்கும் வகையில், உடல் உறுப்புகளைப் பெறுவதற்கான வசிப்பிடம் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்குட்பட்டோர்தான் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

குடும்பத்தினருடன் கலந்துரையாடல்

இறப்புக்குப் பின்னர் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதில் பிறந்த 39 நாளில் இறந்துபோன தங்கள் மகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்த பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரத்தைச் சேர்ந்த பெற்றோரும் அடங்குவார்கள்.

இறந்த உறுப்பினர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முடிவு செய்த குடும்பத்தினரை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "இவர்களைப் போன்ற சிறந்த நன்கொடையாளர்கள், வாழ்வின் முக்கியத்துவத்தை நமக்கு புரிய வைக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை வாய்க்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர்" என தெரிவித்தார்.

ஆஸ்கார் விருது ஆவணப்படத்துக்கு பாராட்டு

'தி எலபேண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதையும் பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியின்போது குறிப்பிட்டார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவையும், இயக்குனர் கார்த்திகி கான்சால்வ்சையும் அவர் பாராட்டினார்.


Next Story