இந்தி நடிகர் விக்ரம் கோகலே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
இந்தி நடிகர் விக்ரம் கோகலே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே. இவர் இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 77 வயதான விக்ரம் கோகலேவுக்கு கடந்த நவம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மராட்டியத்தின் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் சிறுநீரகம், இருதயம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனால், கோமா நிலைக்கு சென்ற நடிகர் விக்ரம் கோகலே, செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், விக்ரம் கோகலே உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விக்ரம் கோகலேவின் மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விக்ரம் கோகலேவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "விக்ரம் கோகலே படைப்பாற்றல் மிக்க பல்துறை நடிகராவார். அவரது நீண்ட நடிப்பு வாழ்க்கையில் பல சுவாரசியமான கதாபாத்திரங்களுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.