சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
டெல்லி,
நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். அதேபோல், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் இறுதி நாளில் வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
அதேவேளை, விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் 10 நாட்களும் பொதுமக்கள் தங்களில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வீட்டில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். தலைமை நீதிபதி வீட்டில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பிரதமர் மோடி தீபாராதனை எடுத்து பூஜை செய்தார்.