பீகாரில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்த திட்டம் - நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பாட்னா,
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அம்மாநில முதல்-அமைச்சர் நிதீஷ்குமார், ' பீகார் மாநிலம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மட்டுமே எங்கள் மாநிலம் முன்னேற முடியும்.
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டோம். அதுபோல நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். நாட்டில் இதுவரை சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் சில சாதியினர் அதிகரித்துவிட்டதாகவும், சில சாதியினர் குறைந்துவிட்டதாகவும் நீங்கள் எப்படி கூறமுடியும்? இது போலியான பேச்சு ஆகும்.
எனவே நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என்றார். மேலும் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும், உயர்சாதி வகுப்புகளுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு சேர்த்து 75% ஆக உயர்த்தும் முடிவையும் முன்வைத்துள்ளார். இதற்கு முன்னர், சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் முழு விவரங்களை சட்டப்பேரவையில் நிதீஷ் குமார் இன்று வெளியிட்டார்.