திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தவேண்டும் என மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில்அதிக அளவில் கலப்படம் செய்திருப்பதாகவும், விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆய்வக அறிக்கையை சுட்டிக்காட்டி சமீபத்தில் பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, 'ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு, திருப்பதி லட்டு பிரசாதத்திலும் முறைகேடு செய்துள்ளது. அந்த ஆட்சியில் வழங்கப்பட்ட லட்டுவில், நெய்யில் கலப்படம் செய்ததோடு மட்டுமல்லாமல், விலங்கு கொழுப்பையும் சேர்த்துள்ளனர்' என குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசியலிலும் கடும் புயலை கிளப்பியிருக்கிறது. அரசியல் ஆதாயங்களுக்காக இந்த கொடூரமான குற்றச்சாட்டுகளை நாயுடு சுமத்துவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. இதற்காக ஆய்வக அறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பரப்புவதாகவும் கூறி உள்ளது.
இந்நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா தலைவரும் விவசாயியுமான சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை வழங்கியதன் மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து மதத்தை அவமதித்திருப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருப்பதாகவும் அவர் தனது மனுவில் கூறி உள்ளார்.
லட்டு பிரசாதம் தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு இந்து சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. இந்துக்களின் உணர்வுகள் மற்றும் மத உணர்வுகளை கொந்தளிக்க செய்துள்ளது என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.