கேரளாவில் ஓடும் ரெயிலில் தீவைத்த நபர் மராட்டியத்தில் கைது...!
ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீ வைத்த ஷாருக் ஷபி, மராட்டியத்தில் கைது செய்யப்பட்டார்.
மும்பை
"கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு 2-ந் தேதி விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயில் கோழிக்கோட்டை கடந்து கோரப்புழா பாலம் அருகே வந்தபோது, டி-1 பெட்டியில் இருந்த ஒருவர் திடீரென பையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து சக பயணிகள் மீது ஊற்றினார். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சுதாரிப்பதற்குள் அந்த நபர் தீயை பற்ற வைத்தார்.
இதில் பயணிகள் சிலர் மீதும் ரெயில் பெட்டியில் இருந்த சீட்டுகளும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனால் உடலில் தீப்பிடித்த பயணிகள் வலி தாங்க முடியாமல் தவித்தனர். அந்த பெட்டியில் இருந்த பயணிகள் உயிருக்கு பயந்து அங்கும், இங்குமாக ஓடினர்.
அப்போது சிலர் அதிவிரைவாக செயல்பட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரெயில் நின்றதும் பயத்தில் பயணிகள் கீழே இறங்கி ஓடினர். இதில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபரும் தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் உயர் அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தண்டவாளத்தில் இறந்த நிலையில் 2 வயது குழந்தை சகாரா, அவருடைய சித்தி ரஹமத், மீன்வியாபாரி நவுபீக் ஆகிய 3 பேர் கிடந்தனர்.
அவர்கள் உடலில் தீப்பிடித்தபோது அதில் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர் யார்? எதற்காக ரெயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்?, அவர் மாவோயிஸ்டு அல்லது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக வடமாநில தொழிலாளியை பிடித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட்ட நிலையில், குற்றவாளியின் மாதிரி வரைபடத்தையும் வெளியிட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் ரத்தினகிரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது ஷாருக் ஷபி சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஷாருக் ஷபியை கைது செய்த மராட்டிய தீவிரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.