இவ்வளவு நாள் எங்க போனாங்க..? 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கியில் குவிந்த மக்கள்..!


இவ்வளவு நாள் எங்க போனாங்க..? 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கியில் குவிந்த மக்கள்..!
x
தினத்தந்தி 4 Nov 2023 4:43 PM IST (Updated: 4 Nov 2023 5:01 PM IST)
t-max-icont-min-icon

வரிசையில் நின்ற பெரும்பாலானவர்களிடம் சரியாக 10 நோட்டுகள் இருந்ததால் சந்தேகம் ஏற்படுகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புவனேஸ்வர்:

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என கூறி, அதற்கான அவகாசமும் வழங்கியது. அந்த அவகாசம் அக்டோபர் 7ம் தேதியுடன் முடிந்துவிட்டது. இனி 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மையங்களில் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியது.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் கடந்த சில தினங்களாக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏராளமானோர் குவிந்தனர். சிலர் 300 அல்லது 400 ரூபாய் கூலி பெற்றுக்கொண்டு வேறொருவருக்காக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஏஜெண்டுகள் மூலம் இவ்வாறு பணம் மாற்றப்படுவதாகவும் தகவல் பரவியது.

இதையடுத்து மத்திய விசாரணை அமைப்புகளும், ஒடிசா மாநில போலீஸ் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தத் தொடங்கினர். வரிசையில் நின்று பணத்தை மாற்றுபவர்கள் உண்மையானவர்கள்தானா அல்லது வேறு யாருக்காவது பணத்தை மாற்றித் தருகிறார்களா என்று விசாரித்தனர்.

ஒருவர் ஒரு நேரத்தில் அதிகபட்சம் பத்து நோட்டுகளை (அதாவது ரூ.20 ஆயிரம் வரை) மாற்றிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வரம்பிற்கு உட்பட்டு சிலர் சரியாக 10 நோட்டுகள் மட்டுமே வைத்திருந்தனர். இது சந்தேகத்தை மேலும் வலுவாக்கியது. கிட்டத்தட்ட 5 மாத காலம் அவகாசம் வழங்கிய நிலையில், இத்தனை நாட்கள் இவர்கள் எங்கே போனார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து நாங்கள் இங்கு வந்தோம். 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்றவர்களின் ஆதார் கார்டை சரிபார்த்தோம். அவர்களின் தொழில் குறித்தும் கேட்டறிந்தோம்" என்றார்.

"வரிசையில் நின்ற பெரும்பாலானவர்களிடம் சரியாக 10 நோட்டுகள் இருந்தது எப்படி? அவர்கள் உண்மையானவர்களா அல்லது அவர்கள் மூலம் வேறு யாரேனும் பணத்தை மாற்றுகிறார்களா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது" என மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்பி மொஹந்தி கூறுகையில், விசாரணை அமைப்பினர் ஏதேனும் விளக்கம் கேட்டால் நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம் என்றார். மக்கள் பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நிற்பதற்குப் பதிலாக அவர்களது வங்கிக் கணக்குகளில் ஏன் டெபாசிட் செய்யவில்லை என்று கேட்டதற்கு, இரண்டு வசதிகளும் உள்ளதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வருவதாகவும், அதில் 95 சதவீதம் பணமாக மாற்றப்படுவதாகவும், 5 சதவீதம் மட்டுமே வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுவதாகவும் மற்றொரு அதிகாரி கூறியிருக்கிறார்.

இதேபோல் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர்.


Next Story