'ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை' - மத்திய அரசு தகவல்


ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை - மத்திய அரசு தகவல்
x

முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

முதியோர் ஓய்வூதியத் தொகை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை மந்திரி நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தேசிய சமூக உதவித் திட்டத்தின்(என்.எஸ்.ஏ.) கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (பி.பி.எல்.) குடும்பங்களைச் சேர்ந்த 60 முதல் 79 வயதுக்குட்பட்ட முதியோர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது.

தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. எவ்வாறாயினும், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் என்.எஸ்.ஏ.பி.யின் கீழ் மத்திய உதவிக்கும் அதிகமாகக் கூட்டி வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன.

இந்த தொகைகள் முதியோர் ஓய்வூதியத்தின் கீழ் தற்போது ஒரு பயனாளிக்கு மாதம் ரூ.50 முதல் ரூ.3000 ரூபாய் வரை மாநில அரசுகளால் உயர்த்தி வழங்கப்படுகின்றன. 2002-03 முதல் 2013-14 வரை, மாநிலத் திட்டமாக என்.எஸ்.ஏ.பி. செயல்படுத்தப்பட்டது.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம் மற்றும் அன்னபூர்ணா ஆகிய அனைத்து துணைத் திட்டங்களுக்கும் ஒரே ஒதுக்கீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் மத்திய உதவித் தொகையாக(ஏ.சி.ஏ.) வழங்கப்பட்டது.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய இரண்டும் 2009 முதல் அறிமுகப்படுத்தப்பட்டன. 2014-15 முதல், இத்திட்டம் 'மத்திய நிதியுதவித் திட்டமாக' செயல்படுத்தப்படுகிறது" என்று இணை மந்திரி தனது பதிலில் தெரிவித்துள்ளார்.


Next Story