'ஆந்திர மாநிலத்தின் அமைதியும், பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது' - தெலுங்கு தேசம் கட்சி மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு


ஆந்திர மாநிலத்தின் அமைதியும், பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது - தெலுங்கு தேசம் கட்சி மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
x

தெலுங்கு தேசம் கட்சியினரின் தாக்குதல்களால் ஆந்திர மாநிலத்தின் அமைதியும், பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது என ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ந்தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். அங்கு மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும் முன்பாகவே ஆந்திர மாநிலத்தின் அமைதியும், பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தெலுங்கு தேசம் கட்சியினரின் தாக்குதல்களால் மாநிலம் முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியின் கும்பல்கள் வெறித்தனமாக செயல்படுகிறார்கள். அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஆளுங்கட்சியினரின் அழுத்தங்களால் காவல்துறை அமைதியாகிவிட்டது.

கடந்த ஐந்தாண்டுகளாக வலுவாக இருந்த அமைதியும் பாதுகாப்பும் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் உடனடியாக தலையிட்டு தெலுங்கு தேசம் கட்சியினரின் அராஜகத்தை தடுத்து நிறுத்தி மக்களையும், அரசு உடைமைகளையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தெலுங்கு தேசம் கட்சியினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story