நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்..!!
கைது செய்யப்பட்ட மனோரஞ்சன், சாகர் சர்மா, நீலம், அமோல் ஷிண்டே ஆகிய 4 பேருக்கும் போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.
புதுடெல்லி,
2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் 22 ஆண்டு நிறைவையொட்டி, நேற்று நடந்த ஒரு பெரிய பாதுகாப்பு மீறலில், லக்னோவை சோ்ந்த சாகா் சா்மா மற்றும் கா்நாடகத்தின் மைசூரைச் சோ்ந்த டி.மனோரஞ்சன் ஆகிய இருவர், பூஜ்ஜிய நேரத்தில் பாா்வையாளா் மாடத்தில் இருந்து பிற்பகல் 1.12 மணியளவில் மக்களவை அறைக்குள் குதித்து, சர்வாதிகாரம் கூடாது என்று முழக்கமிட்டவாறே அவைத் தலைவர் இருக்கையை நோக்கி விரைந்ததுடன், வண்ணப்புகைக் குப்பிகளை வீசினர்.
அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட மராட்டிய மாநிலத்தை சோ்ந்த அமோல் ஷிண்டே மற்றும் அரியானாவைச் சோ்ந்த நீலம் தேவி ஆகிய இருவர், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே "சர்வாதிகாரம் கூடாது" என்று முழக்கமிட்டவாறே இதேபோன்று வண்ணப்புகைக் புகைக் குப்பிகளை வீசினர்.
இந்த சம்பவத்தை திட்டமிட்ட 6 பேர் கொண்ட குழுவில் நால்வரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி)ஆகியவற்றின் தொடர்புடைய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சூழலில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த ஒரு பெரிய பாதுகாப்பு மீறலுக்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பாக 8 பணியாளர்களை சஸ்பெண்ட் செய்து மக்களவைச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை 7 நாள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்கக் கோரி டெல்லி போலீசார் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், சிறப்புப் பிரிவுக்கு 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.