வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட தூய்மை பணியாளர் உயிருடன் வந்ததால் பரபரப்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட தூய்மை பணியாளர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கமகளூரு;
தூய்மை பணியாளர்
சிக்கமகளூரு டவுன் உண்டே தாசரஹள்ளி பகுதியில் கடந்த 12-ந் தேதி கனமழை பெய்தது. அப்போது எகட்டி கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் கரையோரத்தில் இருந்த குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் ஒரு குடிசையில் வசித்து வந்த தூய்மை பணியாளரான சுரேஷ் என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் நகரசபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து 4 நாட்களாக சுரேசை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. மேலும் மாநில பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள் என பலரும் சுரேசை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவட்ட கலெக்டர், நகரசபை தலைவர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். ஆனால் சுரேஷ் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டார். மேலும் தேடுதல் பணியையும் அதிகாரிகள் நிறுத்தினர்.
உயிருடன் வந்தார்
இந்த நிலையில் நேற்று தூய்மை பணியாளர் சுரேஷ் உயிருடன் வந்தார். அவர் நேரடியாக நகரசபை அலுவலகத்திற்கு சென்று நகரசபை தலைவர் வேணுகோபாலை சந்தித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவரை நகரசபை தலைவர் சரமாரியாக கடிந்து கொண்டார்.
அதற்கு சுரேஷ் எந்தவொரு பதிலும் பேசவில்லை என்று தெரிகிறது. ஆனால் உண்மையில் சுரேஷ் விஷயத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அது மர்மமாக உள்ளது. அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாரா? அல்லது அது வெறும் புரளியா? என்பது குறித்து நகரசபை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.