பா.ஜனதாவுடன் கூட்டணி சேரக்கூடாது என்பது எங்களின் தெளிவான நிலைப்பாடு - சரத்பவார்


பா.ஜனதாவுடன் கூட்டணி சேரக்கூடாது என்பது எங்களின் தெளிவான நிலைப்பாடு - சரத்பவார்
x
தினத்தந்தி 3 Dec 2023 4:15 AM IST (Updated: 3 Dec 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுடன் சென்றால் நமது சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஏமாந்து போவார்கள் என்ற எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என்று சரத்பவார் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித்பவார் கடந்த ஜூலை மாதம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தார். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது கட்சியை சேர்ந்த 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர். இதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சி 2 ஆக உடைந்தது.

இந்த நிலையில் கர்ஜத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அஜித்பவார், " சிவசேனா- பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் இணைந்த முடிவு சரத்பவாருக்கு பிடிக்கவில்லை என்றால், எதற்காக அப்படி ஒரு ஆலோசனை கூட்டத்தை தொழிலதிபர் வீட்டில் அவர்கள் நடத்த வேண்டும்" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரத்பவார் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் கைகோர்க்க கூடாது என்ற கட்சியின் நிலைப்பாடு எப்போதுமே மிக தெளிவாக இருக்கிறது. இதற்கு மாறாக வந்த ஆலோசனைகளை நான் உள்பட கட்சியில் உள்ள பலர் ஏற்கவில்லை. எங்கள் கொள்கைகள் பா.ஜனதாவின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை. பா.ஜனதாவுடன் கூட்டணி சேருவதற்காக சட்டசபை தேர்தலில் நாங்கள் ஓட்டு கேட்கவில்லை, அவர்களுக்கு எதிராக போராட ஓட்டு கேட்டோம்.

பா.ஜனதாவுடன் சென்றால் நமது சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஏமாந்து போவார்கள் என்ற எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அதிகாலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டவர்கள் (அஜித்பவார்) யாரேனும், அது கட்சியின் கொள்கை என்று கூறினால், அந்த நபரை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story