வடகிழக்கு இந்திய பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; கனமழைக்கு வாய்ப்பு
திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்து மாநிலங்களிலும், 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இடாநகர்,
நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.
இதுபற்றி அந்த மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில், கனமழையை முன்னிட்டு, நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்த சில மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், சில மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
இதன்படி, அருணாசல பிரதேசத்தில் வருகிற திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையன்று (17 மற்றும் 18 ஆகிய தேதிகளில்), கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும்.
இதேபோன்று, திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்து மாநிலங்களிலும், 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும்.
இமயமலையின் அடிவார பகுதிகளில் அமைந்த மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதியிலும் கனமழை பெய்ய கூடும். இதனால், சிவப்பு எச்சரிக்கையும் விடப்படுகிறது என்றும் தெரிவித்து உள்ளது.
அசாம் மற்றும் மேகாலயாவுக்கும் கனமழையை முன்னிட்டு, சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இதற்கு முன் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், மராட்டியம், சத்தீஷ்கார், ஒடிசா, கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடாவின் பல பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழைக்கான சாதகம் காணப்படுகிறது என்று தெரிவித்து இருந்தது.