தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு அன்னிகேரி, அல்னாவரில் இன்று முழு அடைப்பு


தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு  அன்னிகேரி, அல்னாவரில் இன்று முழு அடைப்பு
x
தினத்தந்தி 25 Sept 2023 12:00 AM IST (Updated: 25 Sept 2023 12:01 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து அன்னிகேரி, அல்னாவரில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

உப்பள்ளி-

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து அன்னிகேரி, அல்னாவரில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

காவிரி பிரச்சினை

கர்நாடகம்- தமிழகம் இடையே நதிநீர் பங்கீடு பிரச்சினை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில், கடந்த மாதம் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின் பேரில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி 9 நாட்கள் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வரை தமிழக்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தநிலையில், கடந்த 18-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனை கண்டித்து கன்னட அமைப்பினர், விவசாயிகள் பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வறட்சி பகுதி

இந்தநிலையில், தார்வார் மாவட்டத்தில் விவசாய கடனை ரத்து செய்யக்கோரியும், அல்னாவர், அன்னிகேரி தாலுக்காக்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் பேராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) அல்னாவர், அன்னிகேரி தாலுகாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அல்னாவர் தாலுகா விவசாயிகள் நல சங்க தலைவர் அல்லாபக்ஷி குந்துபைனவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பவில்லை. மேலும் அணைகளில் உள்ள தண்ணீரின் அளவும் குறைந்து வருகிறது.

தமிழகத்திற்கு தண்ணீர்

இப்படி இருக்கும் போது கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் எப்படி திறந்து விட முடியும். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு விட்டுள்ளது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

எனவே, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை உடனே நிறுத்த வேண்டும். மேலும் மாநிலத்தில் உள்ள சில பகுதிகள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறிக்கையில் அன்னிகேரி, அல்னாவர் தாலுகா விடுப்பட்டுள்ளது. எனவே இந்த 2 தாலுகாக்களையும் வறட்சி பகுதியாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவிக்க வேண்டும்.

முழு அடைப்பு

மேலும், விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும். இந்த ஆண்டு மழை பொய்த்ததால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இதனால் நாளை (அதாவது இன்று) அல்னாவர், அன்னிகேரி தாலுகாவில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story