எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது- கபில்சிபல்
கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது குறித்து கபில் சிபல் கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. விரும்புகிறது என்று தெரிவித்தார்.
கெஜ்ரிவாலுக்கு சம்மன்
நாடெங்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் வழக்குகள் பாய்வதும், சோதனைகள் நடத்தப்படுவதும் எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா
இது தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரசில் இருந்து விலகி 'இன்சாப்' என்ற அமைப்பை நடத்தி வருகிற மூத்த வக்கீல் கபில் சிபல் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க விரும்புகிறது. எனவேதான் எல்லா எதிர்க்கட்சித்தலைவர்களையும் குறிவைக்கிறது. ஜார்கண்ட், சத்தீஷ்கார், கேரளா என எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், தலைவர்களும் எவ்வாறு குறி வைக்கப்படுகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
தேர்ந்ததெடுக்கப்பட்ட அரசுகளை வீழ்த்துவதற்கு அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின் விதிகளை பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமை
எதிர்க்கட்சித்தலைவர்களின் பெயரைக் கெடுக்க பா.ஜ.க. விரும்புகிறது. இதற்காக சி.பி.ஐ.யையும், அமலாக்கத்துறையையும் மத்திய பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது. அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. முன்கூட்டியே தெரிந்து கொள்கிறது.
மத்திய அரசுக்கு எதிராக பேசியபோதே கெஜ்ரிவால் குறி வைக்கப்படுவார் என நான் கணித்துவிட்டேன். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேராத வரையில் பா.ஜ.க.வை எதிர்கொள்வது என்பது மிகக்கடினமானதாகி விடும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.