சட்டசபை தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு-மத்திய மந்திரி ஷோபா பேட்டி
சட்டசபை தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாற்றங்களால் பா.ஜனதாவின் பலம் அதிகரிக்கும் என்று மத்திய மந்திரி ஷோபா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூருவில் மத்திய மந்திரி ஷோபா நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைவர்களுக்கு மரியாதை
கர்நாடகத்தில் பா.ஜனதா வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எடியூரப்பா, அனந்தகுமார், ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்கள் இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. அந்த 3 தலைவர்கள் மீதும் பா.ஜனதா மிகுந்த மரியாதை வைத்துள்ளது. அனந்தகுமார் தற்போது எங்களுடன் இல்லை. எடியூரப்பாவும், ஈசுவரப்பாவும் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஆனாலும் எடியூரப்பா, ஈசுவரப்பாவின் வழிகாட்டுதல்படியே சட்டசபை தேர்தலை பா.ஜனதா சந்திக்கிறது.
எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும், கட்சியில் அவருக்கு பல்வேறு பொறுப்புகளும், பதவிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஈசுவரப்பாவின் அனுபவத்தை கட்சி நன்கு பயன்படுத்தி கொள்ளும். மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாது என்று சில தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் அவர்கள் கட்சி மீது அதிருப்தி கொள்கிறார்கள்.
மாற்றங்களால் பலம்
மேலும் அதிருப்தி அடைந்தவர்கள், சீட் கிடைக்காதவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், கட்சிக்கு எதிராக இருந்து வருகின்றனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. இது மாற்றங்களுக்கான தேவையாகும். கட்சியின் சக்தி, பலம் இருக்கும் போதே புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற முயற்சிகளை மேலிடம் எடுத்துள்ளது.
புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் இன்னும் 10 ஆண்டுகளில் பா.ஜனதாவின் பலம் அதிகரிக்கும். பா.ஜனதா மேலிட தலைவர்கள் பல முறை சிந்தித்து எடுத்த திடமான முடிவாகும். இந்த மாற்றங்களால் பா.ஜனதாவின் பலம் இன்னும் அதிகரிக்கும். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்காதவர்களை சமாதானப்படுத்தியும், கட்சி விட்டு செல்பவர்களுக்கு நல்லது நடக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.