முறையான சோதனையின்றி ரெயில் சிக்னல்கள் இயக்கம் - ரெயில்வே வாரியம் அதிருப்தி
பராமரிப்பு பணிகளுக்கு பின் முறையான சோதனையின்றி சிக்னல் பணியாளர்கள் சிக்னலை இயக்குவதாக ரெயில்வே வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது
புதுடெல்லி,
ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது. 288 பேரை இதுவரை பலி கொண்ட இந்த சங்கிலித்தொடர் விபத்து குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகளுக்கு பின் முறையான சோதனையின்றி சிக்னல் பணியாளர்கள் சிக்னலை இயக்குவதாக ரெயில்வே வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் வௌியிட்டுள்ள அறிவிப்பில்,
"பல்வேறு ரெயில்வே மண்டலங்களில் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு முறையான சோதனை செய்யாமல் சிக்னல் தரப்பட்டுள்ளன. இதுபோன்று 5 சம்பவங்கள் நடந்துள்ளன. சரியான சோதனைகளை செய்யாமல் சிக்னல் தரக்கூடாது என பலமுறை சிக்னல் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுபோன்ற சம்பவம் இன்னும் தொடர்கிறது. இது மிகவும் ஆபத்தானது" என்று தெரிவித்துள்ளது.