எல்லோருக்கும் இலவசங்களை வழங்குவதை ஊக்குவிக்கக்கூடாது - பிரபல பொருளாதார நிபுணர் கருத்து
இலக்கு இன்றி எல்லோருக்கும் இலவசங்களை அள்ளி வீசுவதை ஊக்குவிக்கக்கூடாது என பிரபல பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால் கூறி உள்ளார்.
'ஊக்குவிக்கக்கூடாது'
பொருளாதார நிபுணரும், பிரதமர் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நாம் முழுமையான வறுமையில் இருப்போரை இலக்காக கொள்ள வேண்டும். ஆனால் இலக்கு இன்றி அனைவருக்கும் இலவசங்களை அள்ளி வீசுவது ஒருவிதத்தில் சரியல்ல, அதை ஊக்கப்படுத்தக்கூடாது.
இலவச மின்சாரம் போன்ற திறந்த நிலை மானிங்களுக்கு விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.
அதே நேரத்தில் குறிப்பிட்ட இலக்குக்கான மானியங்கள் தேவை. தேவைப்படுகிற நேரத்தில் ஏழை மக்களுக்கு அது உதவிகரமாக இருக்கும். உதாரணத்துக்கு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட தேவையை சொல்லலாம்.
எல்லோருக்குமான திறந்த நிலை இலவசங்களை வழங்க பயன்படுத்துகிற தொகையை, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம். சுகாதாரத்துறையில் முதலீடு செய்யலாம்.
வேலையில்லா திண்டாட்டம்
வேலையில்லா திண்டாட்டம் பற்றி கேட்கிறீர்கள். வேலையின்மை பிரச்சினை குறைந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் உருவாவது அதிகரித்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நிலையான வளர்ச்சி நீண்டகாலத்துக்கு நீடிப்பது முக்கியம்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சேவைத்துறைகளுக்கு வழங்க வேண்டும்.
சரக்குகள், ஜவுளி, தானியங்கி உதிரி பொருட்கள் உள்ளிட்ட 14 துறைகளில் அரசு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.
அடுத்த சில ஆண்டுகளுக்கு வேலைகளை வழங்கக்கூடிய நல்ல நிலையில் இந்தியா இருக்கிறது.
வர்த்தக பற்றாக்குறை
வர்த்தக பற்றாக்குறையை பொறுத்தமட்டில் பிரச்சினைக்கு புறக்காரணிகளே காரணங்கள் ஆகின்றன. ஆனால் இது நிர்வகிக்கக்கூடிய அளவிலேதான் இருக்கின்றன. இந்தியாவின் நடப்பு கணக்கு பிரச்சினை சிறியதுதான். ஏனென்றால் சேவைகள் ஏற்றுமதி நன்றாக இருக்கிறது.
2047-ம் ஆண்டு இந்தியா வளர்ச்சியடைந்த இந்தியாவாக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்கு பற்றி கேட்கிறீர்கள். இதற்கு கடினமான உழைப்பு தேவைப்படுகிறது. இது சாத்தியமானதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.