ஒன்றா, இரண்டா...!! ஒரே தோசையில் 8 கரப்பான் பூச்சிகள்; அதிர்ச்சியான பெண்
ஒரு மணிநேரத்தில் 30 வாடிக்கையாளர்கள் வந்து செல்ல கூடிய இந்த உணவு விடுதியில் எப்படி, இவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறார்கள் என அந்த பெண் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் பிரபல உணவு விடுதி ஒன்று உள்ளது. அந்த உணவு விடுதிக்கு தனது நண்பருடன் இஷானி என்ற பெண் சென்றுள்ளார். தென்னிந்திய உணவு வகைகளில் பிரசித்தி பெற்ற தோசையை சாப்பிட்டு பார்க்க ஆசைப்பட்டு உள்ளார்.
அவர்கள் இருவரும் மெட்ராஸ் காபி ஹவுஸ் என்ற பெயரிலான அந்த உணவு விடுதியில், தோசைக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தனர். பசியில் காத்திருந்த அவருக்கு தோசை வந்ததும் அதில் ஒரு துண்டு எடுத்து, வாயில் வைக்கும்போது அதிர்ச்சி காத்திருந்தது. தோசையை சாப்பிட்ட அவருக்கு ஏதோ உணர்வு ஏற்பட்டது.
தோசையில் ஏதோ இருப்பது போன்று உணர்ந்து உற்றுநோக்கி இருக்கிறார். இதில், அருகே சென்று பார்த்ததில் தோசையில் பல இடங்களில் கரப்பான் பூச்சிகள் இருந்துள்ளன. இதனால், மனஉளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளானேன். என்ன நடந்தது என நினைத்து பார்க்கும்போது என்னுடைய மனம் உடைந்து போனது என அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். நான் இந்த வீடியோவை பகிராமல் இருக்க இழப்பீடு தரப்படும் என உணவு விடுதியின் உரிமையாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்கள் என் முன் அமர்ந்து 8 கரப்பான் பூச்சிகளை சாப்பிடட்டும். அது ஒன்றே, இழப்பீடுக்கான ஒரே வழியாக இருக்கும் என அவர்களிடம் இறுதியாக கூறி விட்டேன்.
என்னுடைய கோரிக்கை, அடிப்படை சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. இழப்பீடுக்கெல்லாம் இதில் வேலையே கிடையாது. இந்த விவகாரத்தில் எனக்கு உதவுங்கள். எனக்கு மட்டுமின்றி நம் அனைவருக்கும் இதில் ஆதரவென்பது தேவையாக உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.
ஒரு மணிநேரத்தில் 30 வாடிக்கையாளர்கள் வந்து செல்ல கூடிய இந்த உணவு விடுதியில் எப்படி, இவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறார்கள். அவர்களிடம் உரிமம் பற்றி போலீசார் கேட்கும்போது, அவர்களிடம் அதற்கான சான்று எதுவும் இல்லை. ஒரு நடவடிக்கை எடுக்கும் வரை நான் அமைதியடைய போவதில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.