ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனி: பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு
காஷ்மீர் சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி குல்மர்க் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரில் தற்போது சீசன் தொடங்கி உள்ள நிலையில், கட்டுக்கடங்காத வகையில் இந்த வருடம் பனிப் பொழிவு காணப்படுகிறது. வெள்ளைப் போர்வை கொண்டு போர்த்தியது போல் காணும் இடம் எல்லாம் பனி சூழ்ந்து காட்சி அளிக்கிறது. மேலும் ரம்மியமான சூழல் ஜம்மு காஷ்மீரில் நிலவுவதால் உள்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் காஷ்மீர் வருகை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், குல்மார்க் பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திடீரென ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வெளிநாட்டு பயணி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பனிச் சரிவில் சிக்கிக் கொண்ட 5 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பனிச் சறுக்கு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் பனிச் சரிவில் மாயமான வெளிநாட்டு பயணியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வெளிநாட்டு சறுக்கு வீரர்கள் உள்ளூர்வாசிகள் துணை இல்லாமல் பனிச்சறுக்கில் ஈடுபட்டதால் பனிச்சரிவு பகுதிகளுக்கு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.