தங்க நகைகளை கொள்ளையடித்ததுடன் மூதாட்டியை 60 முறை கத்தியால் குத்திக் கொன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர்


தங்க நகைகளை கொள்ளையடித்ததுடன் மூதாட்டியை 60 முறை கத்தியால் குத்திக் கொன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர்
x

பெங்களூருவில் நகைகளை கொள்ளையடித்ததுடன், மூதாட்டியை 60 முறை கத்தியால் குத்திக் கொன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். கடன் தொல்லையால் தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

மூதாட்டி கொலை

பெங்களூரு சி.கே. அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வினாயகாநகர் 5-வது கிராஸ் பகுதியில் வசித்து வந்தவர் யசோதம்மா (வயது 75). இவர், தனது வீட்டின் மேல் தளத்தை வாடகைக்கு விட்டு இருந்தார். இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி யசோதம்மா தனது வீட்டில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். யசோதம்மா அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த தங்க நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சி.கே.அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். மேலும் கொலையாளிளை பிடிக்க தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிருஷ்ணகாந்த் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றியும், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியும் வந்தனர்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது

ஆனால் யசோதம்மாவை கொலை செய்தவர்கள் பற்றிய எந்த துப்பும் முதலில் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் யசோதம்மா வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஜெய்கிஷன் (வயது 29) என்பவர், யசோம்மாவுடன் சமீபத்தில் சண்டை போட்டு இருந்ததும், அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்தை கடன் வாங்கி இருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, ஜெய்கிஷன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

அதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் ஜெய்கிஷனை ரகசியமாக கண்காணித்து வந்தார்கள். அத்துடன் சந்தேகத்தின் பேரில் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் யசோதம்மாவை கொலை செய்ததை ஜெய்கிஷன் ஒப்புக் கொண்டார். உடனே அவரை போலீசார் கைது செய்தாா்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

பங்கு சந்தையில் நஷ்டம்

அதாவது யசோதம்மாவின் வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்த ஜெய்கிஷன் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இதுதவிர பங்கு சந்தையில் அவர் பணத்தை முதலீடு செய்திருந்தார். அத்துடன் ஆன்லைன் மூலமாக சில வியாபாரத்தையும் அவர் செய்து வந்தார். இதில் பங்கு சந்தையில் முதலீடு செய்ததில் ஜெய்கிஷனுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய பல்வேறு நபர்களிடம் அவர் கடன் வாங்கி இருந்தார். அதுபோல், யசோதம்மாவிடமும் ரூ.6 லட்சத்தை அவர் கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் விவகாரம் தொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டு ஜெய்கிஷனை வற்புறுத்தி வந்துள்ளனர்.

60 முறை குத்திக் கொன்றார்

இதனால் யசோதம்மாவை கொலை செய்து, அவரிடம் இருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளாா். அதன்படி, கடந்த 1-ந் தேதி யசோதம்மாவை 60 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தங்க நகைகளை ஜெய்கிஷன் கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போலும், யாருக்கும் சந்தேகம் வராதபடியும் அதே பகுதியிலேயே அவர் சுற்றி திரிந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஜெய்கிஷனிடம் இருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது சி.கே.அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story