ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்
Live Updates
- 3 Jun 2023 11:53 PM IST
ஒடிசா விபத்தில் உருக்குலைந்த ரெயில் பெட்டிகளை மறுசீரமைப்பு பணிகள் தற்போது இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக ரெயில் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், “ஒடிசாவின் பாலசோரில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித சக்தியுடன் அயராது உழைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, ஏழுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரெயில்கள், 3-4 ரெயில்வே மற்றும் சாலை கிரேன்கள் முன்கூட்டியே சீரமைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகளை ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
- 3 Jun 2023 11:23 PM IST
ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் அர்ப்பணிப்புக்கும் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் உண்மையிலேயே ஊக்கமளிப்பவை. ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்தவுடன், மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஏராளமானோர் ரத்ததானம் செய்ய வரிசையில் நின்றனர்.
ரயில்வே, NDRF, ODRAF, உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு சேவை, தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பலர் அயராது உழைத்து மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொரு நபரையும் நான் பாராட்டுகிறேன். தங்களின் அர்ப்பணிப்புக்கு பெருமைப்படுகிறேன்.
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது. தங்களின் அன்பான வார்த்தைகள், துயருற்றிருக்கும் குடும்பங்களுக்கு வலிமை தரும். தங்களின் ஆதரவுக்கு நன்றி” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
- 3 Jun 2023 11:06 PM IST
ஒடிசாவிலேயே தங்கி மீட்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு குழுவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை.
தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை வந்தடைவதை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- 3 Jun 2023 10:53 PM IST
ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்படி, ரெயில் விபத்தில் சிக்கிய 1,175 நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 793 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 382 நோயாளிகள் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளனர், அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மீதமுள்ளவர்கள் அனைவரின் உடல்நிலை சீராக இருந்து வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
- 3 Jun 2023 7:15 PM IST
"ஒடிசாவில் தங்கியிருந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்" ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- 3 Jun 2023 7:07 PM IST
பிரதமரின் கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்" - சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி