போக்குவரத்துத்துறை தொடர்பான 58 சேவைகளை ஆன்லைனில் பெறும் வசதி - அரசாணை வெளியீடு
போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை முழுமையாக ஆன்லைன் முறையில் வழங்கும் நடவடிக்கையை சாலைப்போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ளது.
புதுடெல்லி,
போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை முழுமையாக இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறையில் வழங்குவதற்கான நடவடிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே இணையதளம் வாயிலாக சேவையை பெறும் வசதியை முதல்-அமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஓட்டுநர் உரிமத்தைப் பெறுதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரியை மாற்றுதல் ஆகியவற்றை பொதுமக்கள் www.parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக சேவையை பெறும் வசதி உள்ளது.
இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப்பதிவு, பெர்மிட், உரிமையாளர் மாற்றம் போன்ற மக்களை மையப்படுத்திய மொத்தம் 58 சேவைகள் முழுவதையும் இணையம் வழியாக கிடைக்கச் செய்யும் வகையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சட்டபூர்வ ஆணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு உள்பட போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைன் முறையில் செலுத்த முடியும்.
இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தன்னார்வமாக ஆதாரை உறுதி செய்யும் உதவியுடன் இந்த சேவைகள் கிடைக்கும்.
ஆதார் எண் உள்ளவர்கள் அதனைப் பயன்படுத்தி இந்த சேவையை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஆதார் எண் இல்லாதவர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்தகைய சேவைகளால் பொதுமக்களின் நேரம் மிச்சப்படுவதோடு விதிமுறைகளின் சுமையையும் குறைக்கும். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறையக்கூடும். இது அவர்களின் செயல்பாட்டில் கூடுதல் திறனுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.