மத்திய விசாரணை அமைப்புகளுடன் ஆவணங்களை பகிரக்கூடாது - ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவு
அமலாக்கத்துறையினர் 7 முறை சம்மன் அனுப்பியும், முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டியது தொடர்பான வழக்கில், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறையினர் 7 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுடன் ஆவணங்களை பகிர கூடாது என ஜார்கண்ட் மாநில அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணைகள் குறித்து மாநில உளவுத்துறை அல்லது தலைமைச் செயலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ஜார்க்கண்ட் அரசு அறிவுறுத்தியுள்ளது. முழுமையடையாத தகவல்கள் ஒப்படைக்கப்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜார்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.