சபரிமலையில் வி.ஐ.பி. தரிசன முறை இல்லை என்பதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் - தேவஸ்தானத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சபரிமலையில் வி.ஐ.பி. தரிசன முறை இல்லை என்பதை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம் இணையதளத்தில் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் ரூ.48 ஆயிரம் கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையுடன். சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, சபரிமலையில் இதுவரை வி.ஐ.பி. தரிசன முறை கிடையாது. மறைமுகமாக கோவில் நிர்வாகம் வி.ஐ.பி. தரிசனத்தை கொண்டு வருகிறதோ என்ற சந்தேகம் பக்தர்களுக்கு உருவானது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. அதை தொடர்ந்து வழக்கு விசாரணையின் போது தனியார் நிறுவனம் இணையதளத்தில் இருந்து விளம்பரத்தை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரியது.
மேலும் இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அனில்.கே.நரேந்திரன், பி.ஜி.அஜித்குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சபரிமலை, நிலக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தை மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியான சேவைக்கு பயன்படுத்தக்கூடாது. மண்டல, மகரவிளக்கு காலங்களில் இதனை பயன்படுத்த வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும்.
கேரள போலீஸ் சட்டத்தின் படி சிறப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக நிலக்கல் உள்ளது. இது பெரியார் புலிகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த பகுதி சீசன் அல்லாத நாட்களில் வன விலங்குகளின் வாழ்விடமாகவும் விளங்குகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 12 முறை மட்டுமே ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் அனைவரும் சாதாரண பக்தர்கள் தான். இவர்களில் யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கக் கூடாது. வி.ஐ.பி. தரிசன முறை சபரிமலையில் இல்லை என்ற நடைமுறையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.