கட்டி 5 மாதங்களில் கனமழையால் ஒழுகும் அயோத்தி ராமர் கோவில் - அர்ச்சகர்கள் புகார்


கனமழையால் ஒழுகும் அயோத்தி ராமர் கோவில்
x

கோவிலின் கட்டுமான வடிவமைப்பு காரணமாக சில இடங்களில் மழை நீர் கசிகிறது என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர தலைவர் கூறியுள்ளார்.

அயோத்தி,

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை, கடந்த ஜனவரி 22 ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்தநிலையில், கனமழை காரணமாக ராமர் கோவிலின் கருவறையின் மேற்கூரையில் மழைநீர் ஒழுகுவதாக கோவிலின் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கோவிலின் வடிகால் வசதியும் முறையாக இல்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மழைநீர் ஒழுகுவதன் காரணமாக பகவான் ராமருக்கு அபிஷேகம் செய்வது மிகுந்த சிரமமான காரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸும் இதனை உறுதி செய்துள்ளார். இரவு மழை நின்றப்பின் காலையில் அர்ச்சகர்கள் கோவிலைத் திறந்த போது மழைநீர் தரையில் இருப்பதை பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்யும் இடத்தில் உள்ள தளத்தில் இருந்து மழைநீர் கசிகிறது. இதனை கோவில் கட்டுமான கமிட்டி குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். அவர்கள் அதனை அடுத்த சில நாட்களில் சீர் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கோவிலின் கட்டுமான வடிவமைப்பு காரணமாக சில இடங்களில் மழை நீர் கசிகிறது. அதே நேரத்தில் சில இடங்களில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்னர் மழை நீர் கசிவு இருக்காது என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார்.


Next Story