இந்துக்கள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்


இந்துக்கள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்
x

மக்களவை எம்.பி. ராகுல் காந்தி, இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி தனது உரையைத் தொடங்கினார்.

புதுடெல்லி,

தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் வென்ற எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது அனல் பறந்தது. பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய நிலையில், இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி தனது உரையைத் தொடங்கினார். இருப்பினும், பதாகைகளை அவையில் காட்ட அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய நிலையில், சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மேலும், சிவன் படம் பதாகை இல்லை அது ஒரு ஆவணம் என்று அவர் தெரிவித்தார்.

அரசியல் சாசனத்தின் நகல் மற்றும் சிவபெருமான், முகமது நபி மற்றும் குருநானக் சிங் பல்வேறு படங்களை மக்களவையில் காட்டிய ராகுல் காந்தி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தொடர்ந்து பா.ஜனதாவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று கூறிய ராகுல் காந்தி, பா.ஜனதாவினர் வன்முறை செய்பவர்கள் என்றும் அவர்கள் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களைப் பரப்பும் மதம் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சைக் குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் என பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இந்துக்கள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "தன்னை இந்துக்கள் என அழைத்துக்கொள்ளும் அனைவரையும் வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி கூறியது கடும் கண்டனத்துக்குரியது. ராகுலின் உரை இந்தியா கூட்டணியின் இந்துக்கள் மீதான வெறுப்பு மற்றும் விரோத உணர்வை பிரதிபலிக்கிறது" என்று அதில் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.


Next Story