ஆறுகளில் கழிவுநீர் கலப்பு: உத்தரபிரதேச அரசிற்கு ரூ.120 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம்
ஆறுகளில் கழிவுநீர் கலக்கவிடப்பட்டதால் உத்தரபிரதேச அரசிற்கு 120 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச ஆறுகளில் கழிவுநீர் கலக்கவிடப்பட்டதால் ரூ.120 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு மேற்கொண்ட விசாரணையில், கோராக்பூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளொன்றுக்கு 55 மில்லியன் லிட்டர் கழிவுநீர் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் கலக்கவிடப்படுகிறது.
மேலும், உத்தரபிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, திட்டமிடப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பற்றி தெளிவாக இல்லை. உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு பணிகளுக்குப் பிறகும் நீரின் தரம் சரியாக இல்லை. தற்போதும் நீர் மாசுபடுதல் தொடர்கிறது.மேலும், 3.8 லட்சம் மெட்ரிக் டன் பதப்படுத்தப்படாத மரபுவழி திடக்கழிவு உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கவிட்டதற்கு 110 கோடியும், பதப்படுத்தப்படாத மரபுவழி திடக்கழிவுக்கு 10 கோடி என ரூ.120 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதனை 1 மாதத்தில் செலுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவை நியமித்து சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தவறினால் மேலும் அபராதம் விதிக்கப்படும். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் பதிவாளரிடம் அளிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.