கொரோனாவுக்கு எதிராக 'நானோ' தடுப்பூசி; இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்


கொரோனாவுக்கு எதிராக நானோ தடுப்பூசி; இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்
x

மனித உடலில் உள்ள சொந்த நோய் எதிர்ப்பு செல்களைப் பயன்படுத்தி நானோ தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். சோதனையில் தற்போதைய தடுப்பூசிகளை விட இந்த நானோ தடுப்பூசியில் பல்வேறு நன்மைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன்முதலாக பரவிய கொரோனா தொற்று, உலகம் எங்கும் பரவியது. அதைத் கட்டுப்படுத்தியதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகித்தன. இந்த தடுப்பூசிகள் செயற்கை பொருட்கள் அல்லது அடினோ வைரசைப்பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை ஆகும். ஆனால் இவற்றை போல் அல்லாமல், அடுத்த தலைமுறைக்கான புதிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் அசத்தி உள்ளனர். அவர்கள் டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆவார்கள்.

இவர்கள், மனித உடலில் உள்ள சொந்த நோய் எதிர்ப்பு செல்களைப் பயன்படுத்தி நானோ தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசி எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் தற்போதைய தடுப்பூசிகளை விட இந்த நானோ தடுப்பூசியில் பல்வேறு நன்மைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசி ரத்தம் உறைந்து போகிற வாய்ப்பைக் குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

மேலும் தற்போதைய தடுப்பூசி மருந்தின் அளவை விட 10 மடங்கு குறைவாக செலுத்தினாலும், நானோ தடுப்பூசி நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குவதில் சமமான செயல் திறன் கொண்டுள்ளது. இந்த தடுப்பூசி பற்றி டெல்லி ஐ.ஐ.டி. உயிரி மருத்துவ என்ஜினீரியங் மையத்தின் பேராசிரியர் ஜெயந்தா பட்டாச்சாரியா கூறும்போது, "இது நீடித்த நோயெதிர்ப்பு பதிலளிப்பைக் காட்டுகிறது. மெமரி செல்கள் உருவாக்கத்தால், அடுத்த நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக செயல்படும். இந்த வகை தடுப்பூசியை டெங்கு போன்ற பல்வேறு பிற தொற்று நோய்களுக்கும் பயன்படுத்த முடியும்" என தெரிவித்தார்.


Next Story