நீட் விவகாரம்; தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


நீட் விவகாரம்; தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x

நீட் தேர்வு விடைத்தாள் தொடர்பான வழக்கில் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 தேர்வர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் எழும்பின.

இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பல்வேறு மாநில ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நீட் தேர்வில் 0.001 சதவீத அளவிற்கு அலட்சியம் கண்டறியப்பட்டாலும் அதை மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது.

இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலருக்கு அவர்களின் விடைத்தாள்கள் (ஓ.எம்.ஆர். ஷீட்) கிடைக்கவில்லை எனக் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் தனியார் நீட் பயிற்சி மையத்தின் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மனோஜ் சின்ஹா, நீதிபதி எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வர்களின் விடைத்தாள்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விடைத்தாள்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த மாதம் 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.



Next Story