ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும்: உயர்மட்டக்குழு அறிக்கை
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை மத்திய அரசு கடந்த 1 ஆம் தேதி அமைத்தது. இந்தக் குழுவில் உள்துறை மந்திரி அமித்ஷா ,மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் ராம் நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்துக்கள் கேட்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் இது தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய சட்ட ஆணையத்திடமும் கருத்துக்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.