குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி: ரத்த மாதிரிகள் சோதனை


குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி: ரத்த மாதிரிகள் சோதனை
x

கோப்புப்படம்

குஜராத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது,

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இந்தநிலையில் கட்ஜ் மாவட்டத்தில் பலர் திடீரென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.

கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மொத்தம் 15 பேர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் குழந்தைகள்.

இதுதொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் அமித் அரோரா கூறுகையில், "இறந்தவர்களின் ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி, இறப்புக்கான காரணத்தை கண்டறிய உள்ளோம். முடிவுகள் ஓரிரு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அறியப்பட்ட வைரசா அல்லது புதியதா என்பதை அறிய முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்

இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எச்1என்1, பன்றிக்காய்ச்சல், கிரிமியன்-காங்கோ காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இறப்புகள் மாசுபாடு அல்லது தொற்று நோயால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை " என்று தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள லக்பத்தில் 22 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் டாக்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story