மும்பை தாக்குதல்: மத வேற்றுமையின்றி படுகொலை; இஸ்ரேல் மந்திரி அஞ்சலி


மும்பை தாக்குதல்:  மத வேற்றுமையின்றி படுகொலை; இஸ்ரேல் மந்திரி அஞ்சலி
x

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை அவர்கள், கொடூர முறையில் கொலை செய்தனர். யூத மக்கள் 6 பேரையும் கொன்றுள்ளனர் என கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் 2008-ம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் கடல் வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கசாப் தவிர பிற பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் கசாப் தூக்கில் போடப்பட்டார். மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மும்பை நாரிமன் இல்லத்தில், இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை மந்திரியான மிரி ரெகெவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின் இந்திய யூத சமூக உறுப்பினர்களுடன் அவர் உரையாடினார். தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய மந்திரி ரெகெவ், மும்பை தாக்குதலில் மத வேற்றுமையின்றி மக்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை அவர்கள், கொடூர முறையில் கொலை செய்தனர். யூத மக்கள் 6 பேரையும் கொன்றுள்ளனர். இந்த நினைவகம், பயங்கரவாதம் மீது நடந்த போருக்கான அடையாளம். இதில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் பெயர்களும் செதுக்கப்பட்டு உள்ளன. பல்வேறு நம்பிக்கைகளை கொண்ட மக்கள், முன்பின் யோசிக்காமல் நடந்த கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளனர் என கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை குறிப்பிட்ட அவர், யூதர்கள் என்பதற்காக குழந்தைகளை கொலை செய்து, பெண்களை பலாத்காரம் செய்து, முதியோர்களை கொன்ற ஹமாஸ் மற்றும் டேயிஸ் (ஐ.எஸ்.ஐ.எஸ்.) ஆகியோருக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது.

இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி, எங்கள் மண்ணில் நடந்த இந்த படுகொலைகளுக்கு அதிக விலையை கொடுக்க செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story