ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் - சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மும்பை,
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கடந்த 6,7 ஆகிய தேதிகளில் நடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மேலும் உயராது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரிசர்வ் வங்கி அதை தொடர்ந்து கவனித்து வருகிறது. நிதியாண்டில் பணவீக்கம் 4%-க்கு மேலாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததை விட அதிக வேகத்தில் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அந்நிய செலாவணி கையிருப்பு தேவையான அளவு உள்ளது. இந்த நிதியாண்டின் வளர்ச்சியானது 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இரண்டாம் காலாண்டில் 6.5 சதவீதம், மூன்றாம் காலாண்டில் 6 சதவீதம், நான்காம் காலாண்டில் 5.7 சதவீதம் என ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.
சில்லறை பணவீக்கமானது, முன்பு மதிப்பிடப்பட்ட 5.2 சதவீதத்திலிருந்து 2024 நிதியாண்டில் 5.1 சதவீதமாகக் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.