விழிப்புணர்வு இல்லாததால் 'பெரும்பாலான மக்கள், அமைதியாக அவதிப்படுகிறார்கள்'- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு இல்லாததால், அமைதியாக அவதிப்படுகிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.
தலைமை நீதிபதி பேச்சு
டெல்லியில் நேற்று தொடங்கிய முதல் அனைத்து இந்திய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மாவட்ட நீதிபதிகளின் பங்களிப்பை கோடிட்டுக் காட்டினார். அவர் கூறியதாவது:-
நம்மால் சமூக நீதிக்கான நமது அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என நான் பயப்படுகிறேன். எனவே நீங்கள் கலந்தாலோசித்து, விவாதித்து, முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் காலமெல்லாம் பின்பற்றி வருகிற கொள்கை இது.
பிரச்சினைகளை மறைப்பதில் அர்த்தம் இல்லை. நாம் இந்தப் பிரச்சினைகளை விவாதிக்காவிட்டால், அழுத்தம் தருகிற கவலைக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால், நீதித்துறை அமைப்பு முடங்கி விடும்.
மாநாட்டின் நோக்கம்
நீதித்துறையானது மக்களின் வீட்டு வாசலுக்கே சென்று, அவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு காரணமான முன்னோக்கிப் பார்க்கும் நீதிபதிகள், உற்சாகமான வக்கீல்கள், தன்னார்வலர்கள், அரசுகள் ஆகியோரின் கூட்டு செயல்பாடு பாராட்டுக்குரியது. நாம் மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற எண்ணினால், நமது செயல்பாட்டை முடக்குகிற விஷயங்களை நாம் குறிப்பிட்டு காட்ட வேண்டும். நீதி அமைப்பினை அணுகும் திட்டத்தில், அரசுகளும் ஆக்கப்பூர்வமான கூட்டாளிகளாக இருந்துள்ளன.
இந்த மாநாட்டை கூட்டி இருப்பதின் நோக்கம், நீதி நிர்வாகத்தை நிர்வகிக்கிற பல்வேறு காரணிகளைப்பற்றி சுய பரிசோதனை செய்வதும், நீதித்துறை அமைப்பில் தரமான முன்னேற்றத்தை கொண்டு வருவதற்கான வழிகளையும், வழிமுறைகளையும் கண்டறிவதுதான்.
மாவட்ட நீதித்துறை
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், நீதி வழங்கும் அமைப்பில் மாவட்ட நீதித்துறைதான் முதுகெலும்பாக உள்ளது. மாவட்ட நீதித்துறை அதிகாரிகள்தான் மக்களின் முதல் தொடர்பு புள்ளிகளாக இருக்கிறார்கள். நீதித்துறை பற்றிய மக்களின் கருத்து என்பது, அவர்களுக்கு மாவட்ட அளவிலான நீதித்துறையில் கிடைக்கிற அனுபவத்தைப் பொறுத்துதான் அமைகிறது.
இது உங்கள் தோள்களில் மிகப்பெரிய பொறுப்பை வைக்கிறது. நீங்கள் பன்முக பணிகளை, பங்களிப்புகளை எடுத்துக்கொண்டாக வேண்டும். மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்வதில் நீங்கள் சிறப்பானவர்கள்.
பெரும்பான்மை மக்கள் அவதி
நாட்டில் சிறிய அளவிலான மக்கள்தான் கோர்ட்டை நாடுகிறார்கள். பெரும்பாலான மக்கள், விழிப்புணர்வும், தேவையான வழிமுறைகளும் இல்லாமல் அமைதியாக அவதிப்படுகிறார்கள்.
நவீன இந்தியா, சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுகிற குறிக்கோளுடன் கட்டமைக்கப்பட்டதாகும். ஜனநாயகம் என்பது அனைவருக்கும் உரிய இடத்தை வழங்குவதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.