தேசியவாத காங்கிரஸ் போட்டி கூட்டங்களில் அஜித்பவார் அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு - கட்சி பெயர், சின்னத்தை உரிமை கோரி தேர்தல் கமிஷனுக்கு கடிதம்
தேசியவாத காங்கிரசில் போட்டி கூட்டங்களில் அஜித்பவார் அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை உரிமை கோரி அவரது தரப்பு தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பியது.
மராட்டிய அரசியலை பொறுத்தவரை தேசியவாத காங்கிரஸ் அசைக்க முடியாத கட்சியாக விளங்கி வருகிறது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரசில் திடீர் சூறாவளி ஏற்பட்டது.
சரத்பவாரின் அண்ணன் மகனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் மராட்டிய பா.ஜனதா கூட்டணிக்கு தாவினார். சிவசேனா (ஷிண்டே பிரிவு)- பா.ஜனதா கூட்டணி அரசில் அவர் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.
இதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சி 2 ஆக உடைந்தது.
தேசியவாத காங்கிரசின் மொத்தம் உள்ள 53 எம்.எல்.ஏ.க்களில் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வசம் இருப்பதாகவும், கட்சி தங்களுக்கே சொந்தம் என்றும் அஜித்பவார் தரப்பு கூறியது.
மேலும் கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலத்தை காட்ட நேற்று காலை 11 மணி அளவில் மும்பை பாந்திரா பகுதியில் கூட்டத்தை கூட்டினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் வந்தனர். முக்கியமாக 35 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அஜித்பவார் தரப்பு கை ஓங்கியது.
இதேபோல மதியம் 1 மணி அளவில் மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை சரத்பவார் நடத்தினார். இதில் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பங்கேற்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இது சரத்பவார் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் இரு அணிகளின் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.
இதற்கிடையே இரு தரப்பிலும் நடந்த போட்டி கூட்டங்களில் தலைவர்கள் காரசாரமாக பேசினர். அப்போது கட்சி தங்களுக்கே சொந்தம் என்று இரு தரப்பினரும் கூக்குரலிட்டனர். மேலும் ஒருவரை ஒருவர் விமர்சனமும் செய்தனர்.
கூட்டத்தில் சரத்பவார் பேசுகையில், "பா.ஜனதாவுடன் கைகோர்த்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்பவர்கள் இறுதியில் அரசியல் ரீதியாக அழிக்கப்படுகிறார்கள். தனது அரசியல் கூட்டாளிகளை படிப்படியாக பலவீனப்படுத்துவது தான் பா.ஜனதாவின் கொள்கை. மற்ற மாநிலங்களில் இதற்கு போதுமான உதாரணங்கள் உள்ளன. இதே நிலைதான் அஜித்பவார் தரப்புக்கு ஏற்படும்" என்று எச்சரித்தார்.
மேலும் தனது படத்தை அஜித்பவார் அணியினர் பயன்படுத்துவதற்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அஜித்பவார் அணி சார்பில் நடந்த கூட்டத்தில் அஜித்பவார், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், பிரபுல் பட்டேல் எம்.பி., சுனில் தட்காரே எம்.பி. உள்ளிட்டவர்கள் ஆவேசமாக பேசினர்.
சரத்பவாருக்கு தற்போது வயது 83 ஆகி விட்டதை குறிப்பிட்ட அஜித்பவார், அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் சரத்பவாரை தங்களது கடவுள் என்று புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடியையும் வெகுவாக புகழ்ந்து அஜித்பவார் பேசினார்.
இதற்கிடையே கட்சியை கைப்பற்றும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் இரு அணிகளும் தீவிரம் காட்டின. கட்சியை உரிமை கோரி அஜித்பவார் தரப்பு கடிதம் அனுப்பினால், எங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று இந்திய தேர்தல் கமிஷனுக்கு சரத்பவார் தரப்பு கேவியட் மனுவை அனுப்பியது. அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டு இருப்பதை தேர்தல் கமிஷன் கவனிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
கட்சி மற்றும் சின்னத்தை கைப்பற்றும் நோக்கில் அஜித்பவார் தரப்பு 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் பிரமாண பத்திரத்தையும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியது.
தேசியவாத காங்கிரசை கைப்பற்ற குறைந்தபட்சம் 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்று சட்டநிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த எண்ணிக்கைக்கும் அதிகமான ஆதரவு தங்களிடம் இருப்பதாக அஜித்பவார் அணி கூறியுள்ளது.
மேலும் தேசியவாத காங்கிரசுக்கு மக்களவையில் 5 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களும் உள்ளனர். அதிக எம்.பி.க்களை தங்கள் வசப்படுத்தும் முயற்சியிலும் இரு அணிகளும் ஈடுபட்டுள்ளன. தற்போதைய நிலவரத்தை பொறுத்தவரை அஜித்பவார் அணி கட்சி பெயர் மற்றும் சின்னத்தை கைப்பற்றுவதற்கான அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் நீக்கம் தேர்தல் கமிஷனுக்கு அஜித்பவார் பரபரப்பு கடிதம்
சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில், அஜித்பவார் தரப்பு தங்களுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக பிரமாண பத்திரம் அடங்கிய கடிதத்தை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியது. அந்த கடிதத்தில் தேசியவாத காங்கிரசின் தேசிய தலைவர் சரத்பவார் நீக்கப்பட்டது பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுபற்றி கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு செப்டம்பர் 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடந்ததாக கூறப்படும் தேசியவாத காங்கிரசின் தேசிய அளவிலான மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவார் மற்றும் இதர நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் அந்த கூட்டத்தில் யார்-யார்? கலந்து கொண்டனர், சரத்பவார் தலைவர் ஆக யார்-யார்? வாக்களித்தனர் என்ற ஆவணங்கள் இல்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி பெருவாரியான எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மற்றும் கட்சி அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளால் கட்சியின் புதிய தேசிய தலைவராக அஜித்பவார் நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியின் செயல் தலைவராக பிரபுல் படேல் தொடர்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டு உள்ள நிலையில் அஜித்பவார் தரப்பு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.